மருத்துவமனைக்கு போகும் வழியில் கார் அல்லது பிற வாகனங்களில் குழந்தை பிரசவமாவது பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது உண்டு.
பயணம் செய்யும் காரில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது நிறைய சிக்கல்களைக் கொண்டது. காரின் தூய்மையற்ற சூழல் தாய்க்கும் சேய்க்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்கு பிறகு நடக்க வேண்டிய அத்தியாவசிய காரியங்களை காரில் செய்ய முடியாது.
உலகின் எல்லாப் பகுதிகளிலுமே கர்ப்பிணிகளின் மீது வாகன ஓட்டுனர்கள் கனிவுடனேயே இருக்கின்றனர். இந்தியாவிலும் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லும்போது மிதமாகவே வண்டிகளை ஓட்டுகின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று சலுகை கொடுக்கும் ஓட்டுனர்களும் நம்மிடம் உண்டு.
மேற்கு நாடுகளில் இதுபோன்ற அசாதாரணமான விஷயங்கள் கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக ஆகும் போது, நம்மூரில் நடக்கும் சம்பவங்கள் பெரிதாகப் பதிவாவதில்லை. ஏனெனில் இந்த விஷயங்கள் இங்கே வழக்கமானவை. கிராமங்களில் மிகவும் சகஜமாக இந்த நிகழ்வுகள் உள்ளன. அத்துடன் இதுபோன்ற அசாதாரணமான பிரசவங்கள் பற்றி பெற்றோர் அதிகம் பேசவும் இங்கு விரும்புவதில்லை.