அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் நபரா நீங்கள்? அப்ப இத பாருங்க..!

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த நூற்றாண்டில் தகவல் தொடர்பில் மிகவும் முக்கிய இடத்தில் இருப்பது கம்ப்யூட்டர். அறிவியல் கண்டுபிடிப்பின் அற்புத படைப்பான கம்ப்யூட்டர் இன்றி எந்த வேலையும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. எனவே, கம்ப்யூட்டர் தொடர்பான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து விட்டது. இதனால் கம்ப்யூட்டர் கல்விக்கும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

கம்ப்யூட்டரை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்று பெயர். இந்த நோயின் முதல் அறிகுறி கண்களில் வலி ஏற்படும். தொடர்ந்து பார்வை மங்கல், கண்கள் உலர்ந்துவிடுதல், தலைவலி போன்றவை வரும். கழுத்து வலி, முதுகுவலியும் வருவதுகூட கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பார்க்கும் வேலையால்தான் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்னதான் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் மானிட்டரை சற்று கீழ்நோக்கி இருக்குமாறும், மானிட்டரின் மையப்பகுதி கண்களின் நேர் பார்வையில் இருந்து 4-6 அங்குலம் கீழாக இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏசியில் இருந்து வரும் காற்றோ, பேனில் இருந்து வரும் காற்றோ கண்ணில் பட்டு செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மானிட்டரில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் அளவுக்கு, கண்களை பாதுகாக்க உரிய ஆலோசனை பெற்று கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.

தற்போது வந்து இருக்கும் தட்டை வடிவ (எல்.சி.டி) கம்ப்யூட்டர்கள் கண்களுக்கு ஓரளவு பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். எனவே இதுபோன்ற கம்ப்யூட்டர்களை பயன்படுத்தலாம். கம்ப்யூட்டர் திரையில் கறுப்பு எழுத்துக்கள் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. கம்ப்யூட்டர் திரையின் ஒளிரும் தன்மையை (காண்டிராக்ட்) அதிக அளவில் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் திரையில் இருந்து நமது கண்கள் 20 அங்குல தூரத்தில் இருக்க வேண்டும். 28 அங்குலத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. வேலையின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு கண்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். தலைக்கு மேல் இருந்து வரும் ஒளியோ, சன்னலில் இருந்து வரும் ஒளியோ கண்களில் நேராக படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் வருவதை குறைக்கலாம்.