நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர்! நம்ப முடிகிறதா?

நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.

நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.

எங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்த கோளாறை சரி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார்.

தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு, அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் செய்துகொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகள் எதையும் தடுக்காதீர்கள், குழப்பாதீர்கள். முடிந்தவரை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

நம்முடைய உடலானது நோயில் இருந்து விடுபட்டு நலமடைவதற்குச் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சமூகப் பழக்கவழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை, உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும்.

புகைக்க பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்தப் பழகும்போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசிப் பார்க்கிறது, மன்றாடுகிறது. ஆனால், விடாமல் பழகி உடல் இயக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், கெட்டுப்போன உணவு உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாகத் தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார்.

அதிகமான நீர்ச்சத்தைச் சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தைக் குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. இப்படி உடலை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவதுதான் உடலுக்குள் இருக்கும் அந்த மருத்துவரின் பிரதான வேலை ஆகும்.