இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரலாம்..!

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள அபெக்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிசங்கர், மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:-

மாரடைப்பால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா? என்பது சில நேரங்களில் உங்களுக்கே தெரிவதில்லை. இது ஆபத்தானது. 5-ல் 1 மாரடைப்பு கவனிக்கப்படாமல் போகிறது. புறக்கணிக்கக் கூடாத 4 வகை மாரடைப்பு அறிகுறிகள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்…

மார்பு வலி, அழுத்தம்

மார்பில் அழுத்தம் அல்லது அழுத்துவது போல உணரக்கூடும். இதயத்துக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் போதுமான அளவு வழங்கப்படாததால் மார்பு வலி அல்லது மார்பு அசவுகரியம் ஏற்படுகிறது. மார்பின் மையத்தில் இந்த வலியை உணரலாம். இதுவும் பிற அறிகுறிகளும் தீவிரமாக இல்லாவிட்டாலும் டாக்டர்களிடம் தெரிவிக்க தயங்க கூடாது.

கை, முதுகு வலி

கை, முதுகு, கழுத்து, தாடை, வயிற்றில் ஏற்படும் வலி மாரடைப்பு தொடர்புடையதாக இருக்கலாம். லேசான தலைவலி, தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, கை அல்லது தோள்பட்டையில் வலி அல்லது அசவுகரியம், மூச்சுத்திணறல், குமட்டல் அல்லது வாந்தி போன்றவையும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

குமட்டல்

மாரடைப்பின்போது மார்பு வலியுடன் அல்லது அது இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படலாம். மாரடைப்புக்கு முன்னும், பின்னும் இது நிகழலாம்.

வியர்த்து கொட்டுதல்

வியர்த்து கொட்டுதல் என்பது பொதுவான மாரடைப்பு அறிகுறி. வியர்த்து கொட்டுவதற்கு காரணம் தமனிகள் அடைபட்டிருக்கும்போது இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்ய அதிக முயற்சி தேவைப்படுகிறது. இந்த கூடுதல் முயற்சி உடலின் வெப்பநிலை உயர்வை வியர்வை குறைக்கிறது.

இந்த 4 அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் டாக்டரை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.