ஆரோக்கிய வாழணும்னா.. இந்த டாப் 10 உணவுகளை சாப்பிடுங்க..!

‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை எனப் பார்ப்போம்.
பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கிஇலைகள், பாகற்காய்,போன்றவை குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளை தரக்கூடியவையாகும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. பச்சைநிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள தாது உப்புக்கள் இதய நோய் ஏற்படுவதை இது 11 சதவிகிதம் குறைக்கிறது

தானியங்கள்

இதயநோயை கட்டுப்படுத்துவதில் தானியங்கள் இரண்டாவது இடம் வகிக்கின்றன. அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம், பார்லி, போன்ற தானியங்களிலும் பருப்புவகைகளிலும் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின் இ, இதயத்தைப் பலப்படுத்தவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன. மேலும் இவற்றில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.

ஒட்ஸ்

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் ஒட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்தநாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பை இதயத்தின் நண்பன் என்று அழைக்கின்றனர் அந்த அளவிற்கு இதில் ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால் கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பாதாம் பருப்பை சத்துக்களின் தங்கச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுஉப்புகளும், இதில் உள்ள வைட்டமின் பி17, மெக்னீசியம், இரும்பு துத்தநாகச்சத்தும் பாதம் பருப்பில் அடங்கியுள்ளன. இதனை உட்கொண்டால் இதய நோய் எட்டியே பார்க்காது.

சோயபீன்ஸ்

இதயநோய் வராமல் தடுப்பதில் சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ் உணவுகளில் உள்ள சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு

ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை. அந்த அளவிற்கு ஆப்பிள் ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஃபோலிக் அமிலச் சத்துகள் அடங்கியுள்ளன. எலும்புகள் வலுவடையவும் புதிய சிவப்பணுக்கள் உண்டாகவும் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது. இதிலுள்ள Methionine Acid ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட, இளமையான வாழ்வைத் தருகிறது. மேலும் ரத்தத்தில் கெடுதி செய்யும் கொழுப்பான எல்.டி.எல்-ஐ குறைக்கவும் நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி.எல்-ஐ அதிகரிக்கவும் உதவுகின்றன.

தக்காளி

ஏழைகளின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் சுத்தமான நீரும் பயோட்டின் (வைட்டமின் எச்) என்ற சத்தும் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைத் தடுக்க உதவும் லைசின் எனும் அமிலத்தை ரத்தத்தில் குறையாமல் பாதுகாத்து இளமையைப் பேண உதவுகிறது. தக்காளியிலுள்ள பொட்டாசியம் உப்பு அதிக சோம்பல், படபடப்பு, ரத்தக் கொதிப்பு, இதயநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. அதோடு, புற்றுநோய் நிவாரணியாகவும் பயன்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் மாதுளை

ஆலீவ் எண்ணெய் இதயநோய் வரும் வாய்ப்பை 53 சதவிகிதம் குறைக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள பாலி பெனோல்ஸ் என்ற இதயத்திற்கு நன்மை தரும் ஆன்டி ஆக்ஸிடென்டல் அதிகம் காணப்படுகிறது.

எனவே உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை தரும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டாலே நம்மை எந்த நோயும் அண்டாது என்பது உறுதி.