ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கு ஹெல்மெட் அணிவதும் காரணமாக இருக்கலாம். ஏராளமான ஆண்கள் இதை முழுமையாக நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இந்த நம்பிக்கை நிரூபிக்கப்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு முடி கொட்டுவது ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் முடி உதிர்வைக் கொண்டு சில நேரங்களில் ஆண்களின் வயதைக் கணி்க்கிறார்கள்.
முன்பெல்லாம் தலைமுடி உதிர்வதற்கும், பரம்பரைக்கும் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டது. அதாவது ஒருவருடைய தந்தைக்கு முடி உதிர்ந்தால், அவரது மகனுக்கும் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிந்தனை இப்போது மாறிவிட்டது. ஏனெனில் இப்போது பல ஆண்களின் தந்தைகளுக்கு முடி உதிர்ந்திருந்தாலும், அவர்களுக்கு நன்றாக முடி வளர்ந்திருக்கிறது. மேலும் இந்த தலைமுடி பிரச்சனை பல ஆண்களின் தன்னம்பிகையை சீர்குலைத்துவிடுகிறது.
ஆண்களின் தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில,
- மாறிவரும் வாழ்க்கை முறை
- தேவையில்லாத மன அழுத்தங்கள்
- நேரமின்மை. அதாவது முடியை பராமரிக்க நேரம் ஒதுக்காமை. ஓடி, ஓடி உழைக்கையில் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கவே நேரம் இல்லை. இதில் எண்ணெய் தேய்த்து குளிக்க ஏது நேரம்?
- பொடுகுப் பிரச்சனை. பெண்களைவிட ஆண்களுக்கு தான் பொடுகு பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஹெல்மெட்டும், முடி உதிர்வும்:
- பொதுவாக ஹெல்மெட் தலைமுடி உதிர்வுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால் மிக அரிதாக மேற்கூரிய பிரச்சனைகளோடு, வேறு சில பிரத்யேகக் காரணங்களும் சேர்ந்து முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.
- நமது சருமம் எவ்வாறு சுவாசிக்கிறதோ அதுபோல் நமது முடியும் சுவாசிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் ஹெல்மெட் நமது உரோமக் கால்களை சுவாசிக்க விடாமல் செய்யலாம். அதனால் உரோம கால்கள் மூச்சு விட வாய்ப்பில்லாமல் முடி உதிர்வு எற்பட வாய்ப்பிருக்கிறது.
- ஹெல்மெட் அணிந்திருக்கும் போது நமது தலை வியர்க்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்த வியர்வையை வழியவிடாமல் ஹெல்மெட் தடுத்து விடுகிறது. அதனால் வியர்வை ரோமக் கால்களிலே தங்கி அவற்றைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் கூட முடி உதிரும் வாய்ப்பு உள்ளது.
- ஒரு சில ஆண்களுக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கும் போது, ஹெல்மெட் அணிந்தால் அதுவும் முடி உதிர்வுக்குக் காரணமாக இருந்து விடுகிறது.
பிரச்சனையைத் தீர்க்க வழி:
ஹெல்மெட் முடி உதிர்வுக்குக் காரணமாக இருந்தாலும், ஆபத்து காலங்களில் நமது உயரைக் காக்கிறது. அதனால் ஹெல்மெட் அணிவதை தவிர்க்க முடியாது.
அப்படியானால் தலைமுடி உதிர்வதை எப்படித் தவிர்ப்பது?
- ஒழுங்காக தலைமுடியை கழுவுங்கள். முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும்.
- ஹெல்மெட் அணியும் முன் தலையில் கைக்குட்டை அல்லது ஸ்கார்ப் கட்டிக் கொள்ளலாம்.
- நீண்ட தூரம் பயணம் செய்கையில் அவ்வப்போது இளைப்பாறலாம். அதனால் முடி சுவாசிக்க முடியும்.