பகலில் தூக்குவது நல்லதா.. கெட்டதா..?

ஒரு நாளின் மொத்த உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவது உடல் கெடிகாரத்தின் வேலை. சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மை தயார்படுத்துகிறது.

பகலில் விழித்திருக்கும் உயிரினங்கள் பகலாடிகள், இரவில் விழித்திருக்கும் உயிரினங்கள் இரவாடிகள். பகலில் விழித்துச் செயல்படும் வகையிலும், இரவில் ஓய்வுக்கு ஏற்ற வகையிலும் பகலாடி உயிரினத்தின் உடல் அமைந்திருக்கும். நாமும் பகலாடிகள்தான். ஒரு நாளின் மொத்த உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவது உடல் கெடிகாரத்தின் வேலை. சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மை தயார்படுத்துகிறது.

மெலடோனின், பீனியல் எனும் சுரப்பியால் சுரக்கப்படுகிறது. இதுவே ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் உடலை தயார்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும், இதய துடிப்பையும் மிதமாக குறைக்கிறது. சூரியஒளி இருந்தால், மெலடோனின் சுரப்பு தடுக்கப்பட்டு, உடல் விழிப்பு நிலையில் இருக்கிறது. சில நேரம் தூக்கமின்மை, வேறு நேர மண்டலங்களுக்குப் பயணிப்பதால் உடலுக்கு ஏற்படும் ‘ஜெட்லாக்‘ எனப்படும் உடல் கெடிகாரக் கோளாறு ஆகியவற்றை சரிசெய்ய மெலடோனினை பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் நீல நிற ஒளியால் மெலடோனின் சுரப்பு தடுக்கப்படுகிறது.

பகல் நேரத்து சூரிய வெளிச்சம் போக, இரவு நேரத்தில் நாம் பயன்படுத்தும் விளக்குகள் அனைத்தும் மஞ்சள் ஒளியையே வெளியிட்டுவந்தன. மின்விளக்குகள் வந்த பிறகும்கூட, மஞ்சள் ஒளியை உமிழும் குண்டு பல்புகள்தான் பயன்பாட்டில் அதிகம் இருந்தன. அதன் பின்னர் வந்த குழல் விளக்குகள் வெண்ணிற ஒளியைத் தந்தாலும், நீல ஒளியையும் வெளியிட்டதால் மெலடோனின் சுரப்பு குறையாமல் இருந்து வந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிகம் புழக்கத்தில் உள்ள எல்.இ.டி., அதிக நீல ஒளியை வெளியிடுகின்றன. இந்த விளக்குகளை வீட்டில் பயன்படுத்தும்போது மெலடோனின் சுரப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டாலும், கணினித்திரை, கைபேசி திரையில் இருக்கும் ஒளி உமிழிகள் நீல நிற ஒளி பாதிப்பை ஏற்படுத்தும். மெலடோனின் இயல்பாகச் சுரந்து, ஒழுங்காக உறக்கம் வரவேண்டும் என்றால் உறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் நீல ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேநேரம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கைபேசி, மடிக்கணினி அனைத்திலும் நீல ஒளியை குறைக்கிற அமைப்புகள் வந்துவிட்டன. ‘நைட் மோட்‘ என்று அழைக்கப்படும் அவற்றைப் பயன்படுத்தும்போது, திரை மெல்லியச் சிவப்பு ஒளியுடன் தோன்றும். அதனால் நீல ஒளி தவிர்க்கப்பட்டு இயல்பான மெலடோனின் சுரப்புக்கு உடல் தயாராகும். கணினி, கைபேசிகளில் அந்த அமைப்பு இல்லையென்றால், அவற்றுக்கான இலவச செயலிகள் இணையத்தில் உண்டு. அவற்றைத் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தூக்கம் முக்கியம் அல்லவா?