சப்போட்டா பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?

இந்தியாவில் விளைகிற பழவகைகளில் சப்போட்டாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் உலக சந்தையில் இந்த சப்போட்டாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வளைகுடா நாடுகளிலும், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் இந்தியாவின் சப்போட்டா பழத்துக்கு கடும் வரவேற்பு. பெட்டி, பெட்டியாக டன், டன்னாக வாங்குகிறார்கள்.

திடீரென்று நம்ம சப்போட்டாவுக்கு அப்படி ஏன் வரவேற்பு என்றும் நினைக்க தோன்றும். காரணம் வேறொன்றும் இல்லை. அதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அபூர்வ மருத்துவ சக்தி இருப்பது தான். ஆம்! சப்போட்டா பழத்தில் இருந்து ‘சர்க்கரைட்ஸ்’ என்ற பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த பொருளை பயன்படுத்தலாம். மேலைநாடுகளில் சப்போட்டாவில் இருந்து சுவையான ஆடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும் பசை தயாரிக்க பயன்படுகிறது.

சப்போட்டாவை எந்த தட்ப வெப்ப நிலைப்பிரதேசத்திலும் பயிரிடலாம். அதிக மழைப்பிரதேசத்திலும் இது நன்றாக வளரும். வறண்ட பகுதியிலும் இது வளரக்கூடியது. ஆயிரம் மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில் கூட இது வளரக்கூடியது. பூச்சிகளோ, நோய்களோ, மற்ற பழங்களை போல் இதை அதிகமாக தாக்குவதில்லை. உழவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நல்ல விளைச்சலையும் விலையையும் பெற்று தருகிறது சப்போட்டா பழங்கள்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு சப்போட்டா பழங்களை குளிர்ந்த நீரில் குளுமைப்படுத்தப்பட வேண்டும். அறுவடை செய்தவுடனே இவற்றை செய்வது மிகவும் நல்லது. இதனால் பழங்கள் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். பைபர் பெட்டிகளில் அடைக்கும் பழங்களை 6 டிகிரி சென்டிகிரேடு உள்ள குளிர் அறைகளில் வைத்திருக்க வேண்டும். சப்போட்டா பழங்கள் சுமார் 25 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.