கோழி இறைச்சியையும், மீனையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம். ஏனெனில் அதற்கு காரணம், நமது சமையல் முறை. பல வகை மசாலாக்களை அதில் பயன்படுத்துகிறோம். அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மேலும் கோழி இறைச்சி அந்த மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து போகிறது. ஆனால் அந்த அளவுக்கு வேகவைக்காமல் சாப்பிடுவதே ருசியானது என்ற கருத்து மேலை நாடுகளில் நிலவிக்கொண்டிருக்கிறது. அது ஆரோக்கியமானதல்ல.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் ஹார்மோன்களும், ஆன்டிபயாடிக்குகளும் இருக்கிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் இறைச்சிக்கோழி பண்ணைகளில் ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. 1949-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்டோக் ஸ்டார்டர்ட், ஜுக்ஸ் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள், ‘கோழி தீவனங்களில் குறைந்த அளவில் ஆன்டிபயாடிக்குகளை கலந்து வழங்கினால், அது கோழியின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்’ என்று கண்டறிந்தார்கள். அன்று முதல் கோழிகளின் தீவனத்தில் ஆன்டிபயாடிக்குகள் சேர்ப்பது உலகம் முழுவதும் வழக்கத்திற்கு வந்துவிட்டது.
இதை பயன்படுத்தினால் 15 சதவீதம் வரை கோழியின் எடை அதிகரிக்கும் என்று தெரியவருகிறது. அதோடு கோழிகள் நோய் வாய்ப்படும் தன்மையும் குறைகிறது. தொற்று வியாதிகள் கோழி களுக்கு ஏற்படுவதையும் அவை ஓரளவு தடுக்கிறது. கோழிகளுக்கு ஏற்படும் சாதாரண நோய்களை தீர்க்கும் மருந்து போலவும் ஆன்டிபயாடிக்குகள் செயல்படுகிறது. கோழிகளுக்கு நன்மை பயக்கும் அதே ஆன்டிபயாடிக்குகள் அந்த இறைச்சியை சாப்பிடுவது மூலம் மனிதனுக்குள் செல்லும்.
அது பல்வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதனால் கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ‘சிகிச்சைக்காக மட்டுமே கோழிகளுக்கு ஆன்டிபயாடிக்குகள் வழங்கவேண்டும்’ என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆன்டி பயாடிக் பயன்பாடு பற்றி உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.