கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்த இத மட்டும் செய்ங்க போதும்..!

கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடும். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பவும் செய்யும். சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்திவிடலாம்.

வேம்பு: வேப்ப எண்ணெய்யின் வாசம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவு கலந்து கை, கால்களில் தேய்க்கலாம். இந்த எண்ணெய்யின் வாசம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும். கொசுக்கள் உடலை நெருங்காது. வீட்டின் ஜன்னல், கதவுகளில் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். கொசுக்கள் ஓட்டம் பிடித்துவிடும்.

கற்பூரம்: வீட்டில் சாமி கும்பிடும்போது நிறைய பேர் கற்பூரம் உபயோகிப்பார்கள். வழக்கத்தை விட சற்று கூடுதல் கற்பூரங்களை எரிய வைக்கலாம். கால் மணி நேரம் வரை கற்பூரங்களை எரிய விட்டால் கொசுக்கள் அண்டாது. கற்பூரத்தை நன்றாக அரைத்து அதனுடன் டர்பெண்டைன் எண்ணெய்யை கலந்து அறையில் ஆங்காங்கே தெளிக்கலாம். ஸ்பிரேயாகவும் உபயோகிக்கலாம். கொசுக்கள் ஓடோடிவிடும். கற்பூரத்தை எரிக்கும் எலக்ட்ரானிக் மெஷின்களும் புழக்கத்தில் இருக்கிறது. அதனையும் உபயோகிக்கலாம்.

லெமன் கிராஸ்: லெமன் கிராஸ் செடியையும், அதன் சாறையும் கொசுக்களை விரட்டும் மருந்தாக பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் கொசு விரட்டி சுருள்கள், திரவங் களில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் லெமன்கிராஸின் வாசத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக் கியத்திற்கு ஏற்றதல்ல.

ரோஸ்மேரி: இந்த செடியும் கொசு விரட்டியாக செயல்படக்கூடியது. இது பெரும்பாலும் மூலிகையாகவும், மசாலா பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ்மேரி செடியை உள் அலங்கார செடியாக வளர்க்கலாம். சமையல் அறையில் வைத்து பராமரித்தால் கொசுக்கள் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட்டுவிடலாம்.

மிளகுக்கீரை: புதினா வகையை சேர்ந்த மிளகுக்கீரை செடியும் கொசுக்களுக்கு எதிரியாக விளங்கும். இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் வளர்ப்பதாக இருந்தால் கூடுதல் பராமரிப்பு அவசியம். இல்லாவிட்டால் புதர்போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். செடியாக வளர்ப்பதற்கு பதிலாக மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதன் வாசனை கொசுக்களின் வருகையை தடுத்து நிறுத்திவிடும்.

பூண்டு: கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு மற்றும் வெங்காய செடியையும் பயன்படுத்தலாம். ஏனெனில் பூண்டு மற்றும் வெங்காய தண்டு பகுதியில் இருந்து வெளிப்படும் வாசம் கொசுக்கள், பூச்சி இனங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிரட்டி விடும்.