கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்..!

கர்ப்ப காலத்தின் முதல் காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தின் முதல் மாதம் மிகவும் கவனிக்கத்தகுந்தது. வழக்கமான மாதவிலக்கு நின்றுபோகும் இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.

மாதவிலக்கின் முதல் நாள் முதல் கர்ப்பகாலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதல் மாதம் என்பது, மாத விலக்கு சுழற்சியின் முதல் நாளில் இருந்து 28-வது நாள் வரையிலான காலகட்டமாகும். சிசு வளர்ச்சி நான்கு வாரங்களை எட்டும்போது கர்ப்பிணியின் மார்பகங்கள் அதிக அளவில் மென்மையாகும்.

மார்பு காம்புகளை சுற்றி கறுப்பு நிறம் தோன்றும். கருப்பை வளரத் தொடங்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வுதோன்றும். எச்.சி.ஜி. ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிப்பதால் குமட்டல், வாந்தி, சோர்வு, தலைச்சுற்றல், மார்பகங் களில் வலி போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

கருவாக்கம் முதலில் கருக்குழாய்களில் நடக்கும். கரு, ஆறு நாட்கள் ஆன பின்பு கருப்பையை அடைந்து, கருப்பை சுவர்களில் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.

சிசு கருப்பையை பற்றி பிடிக்கும்போது சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்படும். இதை பெரும்பாலான கர்ப்பிணிகள் மாதவிலக்கு என்று தவறாக புரிந்துகொள்வார்கள்.

இந்த காலகட்டத்தில் சிசுவின் திசுக்கள் பல்கி பெருகிக்கொண்டிருக்கும். வெளிப்பகுதி திசுக்கள் நஞ்சுக்கொடியாக உருவாகும். அதில் இருந்து எச்.சி.ஜி. ஹார்மோன் உருவாகி ரத்தத்தில் கலக்கும். பிரசவம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆனதும் அதன் சுரப்பு அடியோடு நின்றுபோகும்.

முதல் மாதத்தில் வயிற்று வலி, தலைசுற்றல், அதிக வாந்தி, ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக அவசர நிலைகருதி டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

கருத்தரித்து 10-12 நாட்கள் ஆகிவிட்டால், சிறுநீரில் எச்.சி.ஜி. ஹார்மோன் அளவை கணக்கிட்டு கர்ப்பத்தை உறுதி செய்யலாம். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்கள் அல்டரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் சிசுவின் சரியான வளர்ச்சியை கண்டறிய முடியும்.

கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களும், கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களும் தாம்பத்ய உறவை தவிர்ப்பது நல்லது.

இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும். எடையை தூக்குவது போன்ற கடினமான வேலைகளையும், அதுபோன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடாது. எளிதான உடற்பயிற்சிகளை பாதுகாப்பான முறைகளில் செய்துவரவேண்டும்.

ஒன்றாம் மாதம் பாலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது அதிக பலன்தரும். கீரைகள், முளைவிட்ட பயறு வகைகளில் பாலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. தவிடு நீக்காத ரொட்டி, சிட்ரஸ் சத்து அடங்கிய பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளையும் சாப்பிட்டு வரலாம்.

நான்காவது வாரத்தின் இறுதியில் சிசுவின் முகத்திற்கு வடிவம் கிடைக்கத் தொடங்கும். கண்கள் உருவாகத் தோன்றும். கழுத்து வடிவங்கொள்ளும். ரத்த தமனிகளும் தோன்றும்.