கலப்படமில்லாத நல்ல தேனை தேர்ந்தெடுப்பது எப்படி? என கேட்கலாம்.
தேனின் தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை முறை இதுவாகும். ஒரு பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டு பார்ப்பது. அதாவது, தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டு பார்க்கலாம்.
அப்படி செய்யும்போது தேன் அப்படியே இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்பட தேன். அதேபோல நீர் நிறைந்த கண்ணாடி டம்ளர் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போல கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்பட தேன். தேனில் மூன்று வகை உள்ளன. முதலாவது கொம்பு தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்த தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும்.
2-வது பொந்து தேன். இது குகை, மர துவாரம் போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள். இந்த வகை தேன் மிதமான அளவு கிடைக்கும். 3-வது வகை கொசுத் தேனீ என்ற சிறிய தேனீ மூலம் கிடைக்கும் தேன் ஆகும். இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.
தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாக பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும் என்பதால், தேனை சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படி செய்யும்போது தேனின் இயல்புதன்மை மாறிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல் தேனை பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் அதனை பதப்படுத்தி விடுகிறார்கள். எனவே வணிகரீதியாக தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.