உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.

செல்வம் இழந்தால், எதுவும் இழக்கப்படுவதில்லை. உடல்நலம் இழந்தால், எல்லாம் இழக்கப்படுகிறது என்பார்கள். நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசு மயமாகிவிட்ட இன்றைய சூழலில், நம் அனைவருக்கும், ஆரோக்கியத்தைப் பெறுவதே மாபெரும் சவாலாக மாறிவிட்டது.

ஆனால், உணவானாலும் சரி, உடல் உழைப்பானாலும் சரி, உழைப்புக்கேற்ற உணவை உண்டு, ஆரோக்கியத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் அவர்கள் தவறாமல் உட்கொண்டது சிறுதானியங்களைத்தான். ஏனெனில், ஆரோக்கியமான உணவு முறையில், முதலிடம் பிடிப்பது சிறுதானியங்களே.

இவற்றை உட்கொண்டதால்தான் அன்று, உணவே மருந்து என்ற நிலை இருந்தது. ஆனால், நாகரீகம் என்ற பெயரில், துரித உணவுக்கு மாறியதால்தான் தற்போதைய தலைமுறை, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.

நம்முடைய பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் இருப்பதைவிட அதிக சத்துக்களை இந்த சிறுதானியங்கள் கொண்டுள்ளன. இதனை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடல் பருமன் குறைவதுடன், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிலும் ஈவு இரக்கமின்றி, கொரோனா வைரஸ் மக்களைக் கொன்றுகுவிக்கும் இவ்வேளையில், நம் அனைவரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். உருவத்தில், அளவில் மிகவும் சிறியதாகக் காணப்படுவதால், இவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும், கீர்த்தி சிறிது, மூர்த்தி பெரிது என்பதற்கு இணங்க நமக்கு இந்த சிறுதானியங்கள் பல்வேறு நன்மைப் பயக்கின்றன.