கீழ் முதுகு வலி எச்சரிக்கும் ஒரு நோயின் அறிகுறி..!

முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி. மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி 2-ம் இடத்தில் உள்ளது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகு பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மை காரணங்களாக சொல்லலாம்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.

கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையை தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்ட சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரென குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகி கீழ் முதுகில் வலி ஏற்படும்.

‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’, ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’, காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்கு பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்ப காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.

வயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும். காரணம் முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமை பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தை கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்த பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும்.

அதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியை கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது. எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாக கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.