உலகம் முழுக்க நோய்களை உருவாக்கி மக்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் இரவு நேரத்தில் பெரும்பாலானவர்களை தூங்கவிடாமல் இம்சை செய்தும் வருகிறது. உலகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருந்தாலும், மூன்று நான்கு வகை கொசுக்கள்தான் மனிதர்களை கடித்து நோய்களை உருவாக்குகின்றன.
கொசுறு போன்ற உயிரினம்தான் கொசு என்றாலும், மனிதர்களின் கைகளுக்குள் சிக்காமல் கண்ணில்பட்ட வேகத்திலே மறைந்து கடுப்பை ஏற்றுவதில் கொசுவுக்கு நிகர் கொசுதான். கடிக்கும் ஒரு கொசுவை ஆவேசத்துடன் தாக்கி அடித்து கொல்வதற்குள் பலர் மூச்சுவாங்கிவிடுவார்கள். மனிதர்களுக்கு தொல்லைகொடுத்து கடித்து நோயை உருவாக்குபவை பெண் கொசுக்கள்தான். அவைகளுக்கு மட்டும்தான் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது.
தனக்கு இரையாகும் மனிதர்களின் சருமத்தில் அமர்ந்ததும் இது இரண்டு வகையான குழாய்களை உடலுக்குள் செலுத்தும். ஒன்று, ரத்தம் கெட்டியாகாமல் இருப்பதற்குரிய என்சைமை உள்ளே செலுத்தும். இரண்டாவது குழாய் வழியாக தேவையான ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும். இந்த செயல் நடக்கும்போதே கொசுவின் உமிழ்நீர் அந்த மனிதரின் உடலுக்குள் புகுந்துவிடும். கொசு தனது பசியை தீர்க்கும் இரைக்காக மட்டும் மனிதர்களை கடிப்பதில்லை. தனது முட்டைகளுக்கு தேவையான புரோட்டினுக்காகவும் மனித ரத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறது.
கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும்போதே அதனுடைய உமிழ்நீர் வழியாக சில நோய் அணுக்களை அந்த மனிதரின் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. கொசுக்களிடம் இருக்கும் அந்த நோய் அணுக்கள் கொசுக்களுக்கு எந்த நோயையும் உருவாக்காத நிலையில் அது எப்படி மனிதர்களுக்கு மட்டும் நோயை உருவாக்குகிறது என்பது இன்னும் ஆராய்ச்சிகளுக்கு பிடிபடாத விஷயமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.
கொசுக்களை அழித்தால் மட்டுமே அவைகளால் உருவாகும் நோய்களை தடுக்கமுடியும். அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு தண்ணீர் தேவை. டெங்குவை உருவாக்கும் ஈடிஸ் ஈஜிப்தி பெண் கொசுக்கள் சுத்தமான நீர் நிறைந்திருக்கும் பகுதிகளில் தான் முட்டையிடும். சில வகை கொசுக்கள் தேங்கிக்கிடக்கும் அசுத்த நீரில்தான் முட்டையிடும். அதனால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டைச்சுற்றிலும் சுத்தம்செய்து, கொசு முட்டையிடுவதற்குரிய வாய்ப்பு உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கொசு, குறிப்பிட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து விரட்டி விரட்டி கடிக்கும் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். ஒவ்வொரு தனிமனிதரின் உடலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. கூடுதல் கார்பன்டை ஆக்சைடு இருக்கும் உடலை கொசுக்கள் தேடிவருவதாக, ஆய்வுத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது. அதிக சுறுசுறுப்பு கொண்டவர்களையும், குண்டான உடல்வாகு கொண்டவர்களையும் கொசுக்கள் விரும்புவதாக இன்னொரு ஆய்வு சொல்கிறது. அதிக அளவில் வியர்க்கும் தன்மை கொண்டவர்களையும் கொசுக்கள் தேடிவருகிறதாம். மனித சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்களும் கொசு வந்து கடிக்க காரணமாக இருக்கின்றன என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மாலை மயங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் கொசுக்கள் இரை தேட கிளம்புகின்றன. அந்த நேரத்தில் சுகாதாரமற்ற வெளி இடங் களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். கை, கால்களை முழுமையாக மூடும் விதத்திலான உடைகளை அணிவதும், தொளதொளப்பான உடைகளை அணிவதும் கொசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மனிதர்கள் மீது வீசும் வாடையை வைத்தும், குறிப்பிட்ட சலனங்களை வைத்தும் கொசுக்கள் மனிதர்களை அடையாளங்கண்டு கடிக்கின்றன. அதே நேரத்தில் இரவில் மனிதர்களின் சலனங்களை அறிவது அதற்கு சிரமமாகிவிடுவதால், வெளிச்சம் இருக்கும் பகுதியில் உள்ள மனிதர்களை தேடிவந்து கடிக்கும். அதனால் இரவில் லைட் போடுவதற்கு முன்னால் வீட்டு கதவு, ஜன்னல் போன்றவைகளை மூடிவிடுங்கள். அவ்வாறு செய்தால் வெளியே இருந்து கொசுக்கள் வீட்டின் உள்ளே வருவதை தடுத்துவிடலாம்.
கை கால்களை அடிக்கடி ஆன்டிபாக்டீரியல் சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். இதன் மூலம் சரும வாடையை வைத்து கடிக்கவரும் கொசுக்களை தடுத்துவிடலாம். சில வகை கொசுக்கள் அதன் இருப்பிடத்தில் இருந்து 300 முதல் 500 அடி உயரமே பறக்கும். அதனால் உங்கள் வீட்டின் அருகில் கொசுவின் இருப்பிடம் இல்லாமல் இருந்தால், நீங்கள் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.