செரிமான பிரச்சனையில் இருந்து உங்களை காக்கும் பீட்ரூட்!

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்:

கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.

இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன.

ரத்த சர்க்கரையை குறைக்கும்:

பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன.

செரிமானம் கூடும்:

செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது.

ரத்த சிவப்பணுக்கள்:

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பலி வலி நீங்கும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். வாரம் ஒருமுறை பீட்ரூட் சூப் குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள்ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன.