ஐம்பது வயதைக் கடந்த கணவர் அவ்வப்போது, மனைவி சமைக்கும் உணவு ருசியாக இல்லை என்று கூறினால், அவர் மீது கோபம் கொள்ள வேண்டியதில்லை. ஏன்என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
ருசியை உணர முடியாத நிலை ஏற்படும்போது அவர்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துகொண்டிருக்கும். அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உடல் ஆரோக்கியம் குறைவது போன்று அவர்களது மன ஆரோக்கியமும் குறையும். மனந்தளர்ந்து போவார்கள். இதுபற்றிய உலகளாவிய ஆய்வு ஒன்று, ‘ருசியின்மையால் அவதிப்படுகிறவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே, அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்வதாக’ கூறுகிறது.
நாக்கில் ருசியை உணர்த்துகின்ற திசுக்கள் ஏராளமாக உள்ளன. அவை சுவை அரும்புகள் என்று சொல்லப்படும் ‘டேஸ்ட் பட்ஸ்’களில் காணப்படுகின்றன. அந்த அரும்புகள், நாக்கில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். வயதாகும்போது சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறையும்.
நாம் நாக்கு மூலம் உணவின் ருசியை நன்றாக உணரவேண்டுமானால் அதற்கு மூக்கின் ஆரோக்கியமும் அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம், தும்மலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால் நாக்கிற்கு அதன் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். மூக்கு ஆரோக்கியமாக இல்லாததால் சாக்லேட்டின் மணம் தெரியாது. மணமும், சுவையும் ஒன்றானால்தான் முழுமையான ருசியை அனுபவிக்க முடியும். அதனால்தான் ஜலதோஷம் இருக்கும்போதும் உணவின் முழு ருசியை அனுபவிக்க முடியாமல் தவிப்போம்.
ருசியின்மை வேறுசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கிறது. காது, வாய், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளும், புற்றுநோயும் ருசியின்மையை உருவாக்கும். இந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளித்தாலும் ருசியின்மை தோன்றும். தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், சிலவகை மருந்துகளின் பயன்பாடு, காது-மூக்கு-தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவைகளும் ருசியின்மைக்கு காரணம். பற்களில் ஏற்படும் பாதிப்புகள், ஈறு நோய்கள், வாய் சுத்தமின்மை போன்றவற்றாலும் ருசியின்மை அதிகரிக்கும்.
ருசியின்மையின் காரணத்தை அறிய காது-மூக்கு-தொண்டை நிபுணர், பற்சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை தேவைப்படும்.