பெற்றோர்கள் ஏன் உங்கள் காதல் திருமணத்தை ஒத்துக்க மாட்டேங்கிறாங்க?

வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசயம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் இன்றைய இளைய தலைமுறைக்கு எளிதான காரியமாக உள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங்கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள்தான்.

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்பதற்கான காரணத்தை அலசுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.

காதல் என்பது உணர்வு ரீதியாக எடுக்கும் முடிவு. இது பெரும்பாலான சமயங்களில் தோல்வியில்தான் முடிகிறது என்பது பெற்றோர்களின் வாதம். துணையை தேர்ந்தெடுப்பதில் குழந்தைகள் தவறான முடிவு எடுத்துவிட்டு பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு நிற்பார்களே என்ற பயம்தான் காதல் திருமணத்தை எதிர்க்க காரணம். எனவே பாதுகாப்பான வாழ்க்கையை தங்களால் மட்டுமே தேர்தெடுத்து தர முடியும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.

அனுபவம் போதாது

தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் இன்னமும் குழந்தைகள்தான் என்று பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். துணையை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு குழந்தைகளுக்கு அனுபவம் போதாது என்பது பெற்றோர்கள் வாதம். எனவேதான் காதல் திருமணத்தை எதிர்க்கின்றனர். தாங்கள் பார்த்து வைக்கும் பெண்ணையோ / பையனையோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்திய கலாச்சாரம்

இந்தியாவில் காதல் திருமணங்களை விட நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள்தான் சிறந்தது என்று இன்றைக்கும் கருதப்படுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள பாதுகாப்புதான். தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து கொடுத்ததைப்போல தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த துணையை தேர்தெடுத்து தரவேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் நம்பிக்கை.

கண்டதும் காதல்

இன்றைக்கு மனதிற்கு பிடித்தவர்களை பார்த்து பழகிய உடன் மீட்டிங், டேட்டிங் என கலாச்சாரம் மாறிவிட்டது. இதனை இன்றைய பெற்றோர்கள் விரும்புவதில்லை. தங்கள் வீட்டிற்கு வரும் புதிய நபர் தங்களால் தேர்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

இந்தியாவில் உள்ள பெற்றோர்களைப் பொருத்தவரை திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான வாழ்க்கைத் துணையை இன்றைய டெக்னாலஜி படி ஆன்லைன், மேட்ரிமோனியல், சோஷியல் நெட்ஒர்க் சர்வீஸ் மூலம் தேர்தெடுக்கின்றனர். தங்களுக்கு வரப்போகும் மருமகனோ, மருமகளோ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். காதலோ, நிச்சயிக்கப்பட்டதோ திருமண வாழ்க்கை என்பது தலைமுறை தாண்டியும் சந்தோசமாக இருந்தால் சரிதான்.