மாமியார் – மருமகள்: தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு இதோ..!

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் ஆலோசனைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள்.

நட்பாய் அணுகுங்கள்

பள்ளி, கல்லூரிகளில் சீனியர்கள் எப்பொழுதுமே ஜூனியர்களை ராகிங் செய்ய நினைப்பார்கள். அதே மனோபாவத்துடன்தான் மாமியார்கள் நடந்துகொள்கின்றனர். வீட்டில் அவர்கள்தானே சீனியர். புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று நினைக்கின்றன. சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

மரியாதை அவசியம்

பெரும்பாலான மாமியார்களை கோபத்திற்குள்ளாக்கும் விசயம் அவர்களை மதிக்காமல் மரியாதைக்குறைவாக நடத்துவதுதான். எனவே அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மதிப்பு மரியாதையை கொடுங்கள். அப்புறம் உங்களைப் போல ஒரு மருமகள் உண்டா என்று எல்லோரிடமும் கூறி பெருமைப்படுவார் உங்கள் மாமியார்.

பொறுப்புணர்வு

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும்.

எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரை நிம்மதியடையவைக்கும். அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டு குடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள்.

அன்புமழை பொழியுங்கள்

மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது. மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

சொல்வதை கேளுங்கள்

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.

மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம். ஏனெனில் இன்றைக்கு நாம் செய்யும் காரியம் பின்னாளில் நமக்கும் நடக்க நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.